Wednesday, May 21, 2014

ஹிந்தி டீச்சர் வாரணசி


சரியாக ஒரு வருடத்திற்குப்  பின் இத்தளத்தில் பதிவேற்றப்படும் பதிவு இது. ஆங்கிலத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்தாலும் தமிழை நான் தவிர்த்தேன். தமிழில் பொதுத் தளத்தில் எழுதுவதை மட்டுமே தவிர்த்தேனே தவிர முழுவதுமாய் அல்ல. திரைக்குப் பின் தமிழில் சில படைப்புகள் உருவாகிக் கொண்டிருந்தன. பொதுத் தளத்தில் தமிழ் புழங்கப்படாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.

தொடர்ந்த பயணங்களும், வாழ்க்கைத் தேடலும், மூன்று வருடத்திற்கு முன் துவங்கிய தமிழ் நாவல் படைப்பும் என் நேரத்தை பிடித்துக் கொண்டன.

இருந்தும் வட்டம் தமிழ் கடந்து பரவியதால் ஆங்கிலப் பிரவேசம் எடுக்க வேண்டியிருந்தது. தற்போது திரும்பிவிட்டேன். தமிழிலும் இனிப் பதிவுகள் தொடரும். எங்கும் மறைந்து  விடவில்லை.

நாவல் வேலை இரண்டு மாதத்திற்கு முன் முடிந்தது. நாவல் பற்றி பிறகு மெதுவாகப் பேசலாம். அவ்வளவு எளிதில் வெளியே ஒரு படைப்பை வெளிக்கொணரும் சூழல் தமிழில் இல்லை. தத்தமது புத்தகங்களை வெளியிடும் அளவில் தான் தமிழ் பதிப்பகங்கள் உள்ளன. கவலையில்லை. பதிப்பகம் துவங்க வேண்டியது தான். கதை பற்றிக் கதைக்க நமக்கு சமயங்கள் பல உண்டு. பிறிதொரு நாள் பார்த்துக் கொள்வோம்.

இப்போதைக்கு நம் உரையின் நோக்கம் மொழிகளின் பக்கம் செல்கிறது. ஹிந்தியின் அவசியம் பற்றி எடுத்துரைப்பதாய் இது இருக்கும். ஏன் திடீரென்றென நீங்கள் கேட்கலாம். காரணம் உண்டு. முடிவில் தெளியும்.

இது போதுமென கிடைத்ததைக் கொண்டு சிறப்புடன் வாழும் ஆத்மாக்களுக்கு இது தேவையற்றது. பிடிகளிலிருந்து விடுபடத் துடிக்கும் இதயங்களுக்கு இவ்வுரை மிக முக்கியம். அவர்கள் இதனை முன்பே உணர்ந்திருப்பினும் நினைவூட்டுவதும் பகிர்ந்து கொள்வது என்னகத்தே கடமை.

பிற மொழிகள் கற்பதென்பது நமக்குத் தெரியாத பல வாயில்களை திறக்க வல்லது. மாயம் நிகழ்த்தக் கூடியது. மொழி கற்றலின் சுவையறிந்தோர் இதனை உணர்வர்.

என்னைப் பொறுத்தவரை நான் மொழி கடந்து பல வருடங்கள் ஆகிறது. ஒரு மொழியிலோ இடத்திலோ வழக்கத்திலோ என்னை நான் வரையறுத்துக் கொள்வதில்லை. எல்லைகள் கற்பனையானவை. எல்லைகளை உடைக்க மொழிகள் மிக அவசியம்.

எந்த வகையில் ஹிந்தி அவசியமாகிறது?

எல்லா வகையிலும். ஒன்றேகால் லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் முப்பத்தியோரு லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் உள்ள அந்தப் பெரும் வேறுபாட்டில் தான் அவசியமாகிறது. இது தமிழகம் மற்றும் இந்தியாவின் பரப்பளவு. தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டாலே ஹிந்தியின் அவசியம் நமக்கு புலப்படும். பயணம் செய்யாத கால்கள் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஏனையோருக்குத் தேவை.

உலகில் அதிகம் பேசப்படும் மொழி மேண்டரின், பின் ஸ்பானீஷ் பிறகு ஆங்கிலம். அதற்கடுத்து?

ஹிந்தி உருதுக் குடும்பம். ஹிந்திக்கும் உருதுக்கும் வேறுபாடு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது தான். ஒன்றுமில்லாதது. எழுத்து முறை வேறு வேறாதானே தவிர பேச்சில் பெரிய மாற்றமில்லை. சமஸ்கிருத பாளி சொற்களுக்குப் பதில் அரேபிய ஃபார்ஸி சொற்கள். இதெல்லாம் ஒரு வேறுபாடா?

உலகின் நான்காவது அதிகம் பேசப்படும் மொழி ஹிந்துஸ்தானி எனப்படும் ஹிந்தி-உருதுக் கூட்டமைப்பு. இதற்குப் பின் தான் அரபியும் இன்ன பிறவும். இவ்வளவு முக்கியம் இருக்கிறது வேறென்ன வேண்டும்.

ஆங்கிலம் போதும் எங்களுக்கு என்று சொல்ல முடியாது. தமிழகம் ஆங்கிலம் புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் வட இந்தியா இல்லை. இங்கு சர்வம் ஹிந்தி மயம். எண்களைக் கூட ஆங்கிலத்தில் அறிய இயலா பலரை நான் கண்டிருக்கிறேன். ஹிந்தி என்பது இங்கு சுவாசத்தைப் போல. இது எல்லோரும் அறிந்ததே.

மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், ஹிந்தி இந்தியாவின் இணைப்பு மொழி. தேசிய மொழி என்று சொல்லி சிக்க விருப்பமில்லை. இந்தியாவின் பொதுத் தளத்தையும் இதயத் துடிப்பையும் உணர ஹிந்தி இன்றியமையாதது.

எதற்கு இதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

பொறுமை. எனக்கு நம் கல்வி முறையில் நம்பிக்கை கிடையாது. துளிகூடக் கிடையாது. நம் கல்விமுறையால் பல பட்டம் தாங்கிகளை உருவாக்க முடியுமே தவிர அறிவாளிகளையும் வல்லுனர்களையும் அல்ல. துவக்கம் முதலே நான் நம் கல்வி முறையுடன் முரண்டுபிடிப்பவன். அறிவைத் தேட வேண்டும் என நம்புபவன். யாரிடமிருந்தும் எவ்வித சலசலப்பு வரினும் செவி மடுத்ததில்லை. என் வேலையை நடத்திக் கொண்டு இருப்பவன். கல்வியில் மாற்றம் வேண்டும் என்பதில் மிகத் திடமான நம்பிக்கையுள்ளவன்.

எதற்கு இங்கு என் கதை?

அவசியமிருக்கிறது. ஒன்றல்ல ஒரு டசன் காரணங்களுக்காக சென்ற மாதம் காசிக்கு வந்தேன். புதிதாய் ஒரு காரணம் முளைத்தது. வந்த வேலைகள் பல இருக்க புதிதாய் ஒரு வேலை தேடி வந்தது. கற்றல் சம்பந்தமானது. உடனே தலையசைத்தேன்.இந்திய அரங்கில் மட்டுமல்ல உலக அளவிலும் ஹிந்திக்கு உள்ள சந்தை இங்கு வந்து தான் தெரியும். மிகவும் நெருக்கமான ஒரு பேராசிரியர் இங்கு பதினான்கு வருடமாய் ஹிந்தி, உருது மற்றும் சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்று வரை அவரிடம் நூற்றுக்கும் மேபட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொழி கற்றுள்ளனர். ஒருவர் கூட இந்தியர் இல்லை.

துவக்கத்தில் அவரைப் பற்றித் தெரியாது. எல்லா இடத்திலும் ப்ராத்மிக் ப்ரவின் என்று சொல்லிக் கொண்டு ஹிந்தி என்ற பெயரில் மூளையைக் குதறிக் கொண்டு இருப்பவர்களில் ஒருவரென நினைத்திருந்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர் சொல்லிக் கொடுக்கும் விதம் தனித்துவம் வாய்ந்ததென்று.

விளங்கிக் கொண்டபொழுது அதிர்ச்சியடைந்தேன். மிக எளிதான வடிவமைப்புடன் கூடிய ஹிந்திப் பாடங்கள். ஒரு மணி நேரத்திற்குத் தனி நபர் பாடத்திற்கு இவர் வசூலிக்கும் கட்டணம் 600 ரூபாய். இதுவே குழுவிற்கு 1500 ரூபாய். அதிகமாகத் தான் தெரியும் ஆனால் அந்த ஒரு மணிநேரம் உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும். ஒரு வாரம் இவர் வழிமுறையில் படித்தால் முன் பின் அறிமுகமில்லாதவருக்கும்  ஹிந்தி புரியத் துவங்கிவிடும். ’ஹிந்தி டீச்சர் வாரணசி’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்திய அளவில் வெளிநாட்டினருக்குப் மொழிப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிறுவனங்களில் இவருக்கு இரண்டாம் இடம்.

தன் கிளையை டில்லிக்கு எடுத்துச் செல்ல இருக்கிறார். இது தொடர்பாக முதலில் சந்தித்தேன். பின்னர் நடந்தது எங்களுக்குள். விசயம் இதுதான். அவரிடம் போராடி மதுரைக்கு வரும் போது ‘ஹிந்தி டீச்சர் வாரணசி’யையும் எடுத்து வருகிறேன். யார் வேண்டுமானலும் சேரலாம். முதல் வகுப்பிலேயே தெரிந்துவிடும் எங்களுக்கும் பிறருக்குமான வேறுபாடு.

அது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் இரண்டு ஹிந்தி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை எங்கள் முறையில் பயிற்சியளித்து நிறுவ எண்ணம். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

மற்றபடி, கூட்டம் கூட்டி மாணவர்களைச் சேர்க்க விருப்பமில்லை. வாரணசியையும் டெல்லியையும் சமாளிப்பதே பெரிது. மதுரையில் விடாப்பிடியாக தொடங்குவதன் நோக்கம் வர்த்தக ரீதீயானதல்ல. தேவைப்படுபவர்களுக்கு கற்பிப்பது அவ்வளவு தான். யார் வேண்டுமானலும் இணைந்து கொள்ளலாம். கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பெரிதாக இருக்காது என்பது என் சார்பில் நிச்சயம் சொல்ல முடியும். ஆர்வமுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவே இதை நான் எழுதுகிறேன். கேள்விகளும் புலம்பல்களும் இல்லாமல் என்னடமிருக்கும் வழியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதுவே இக்கட்டுரையின் நோக்கம். 

Monday, May 27, 2013

தலைவலி (சிறுகதை)

லைவலி

பாபா பகுர்தீன்

அன்று காலை எழுந்ததில் இருந்தே தலைவலி. கடந்த சில நாட்களாக மயக்கம் போல் தென்பட்ட ஏதோ ஓர் விசித்திர நோய் தற்போது தலைவலியாய் தலையெடுத்திருப்பதை மட்டும் தெளிவாக உணரமுடிந்தது.
நான் எப்பொழுதும் அப்படித்தான். உடல்நிலை சரியில்லை என்றால் நேரே மருத்துவரிடம் போய் நிற்கும் பழக்கம் பிறந்ததில் இருந்து கிடையாது. காய்ச்சல் வந்தால் குளுரும் நீரில் குளித்துவிட்டு நேரே சென்று நாலைந்து ஐஸ்க்ரீம்களை விழுங்கிவிட்டு வரும் மிகச் சிலரில் நானும் ஒருவன். இந்தத் தலைவலி என்னை என்ன செய்து விடும்?.
அலட்சியம் மேலோங்க வலியும் மேலோங்கி தொல்லை கொடுத்தது. என்ன செய்யலாம் இப்போது?
கண்ணை மூடு. தூங்கிவிடுவோம்.
ம்ஹூம். யோசனை செய். உனக்கான அனைத்து பதிலும் உனக்குள்ளேயே உறங்கிக் கிடக்கிறது.’
ஏதோ ஒரு பெரிய மனிதர் சொன்ன சொல்லை மனம் வெளியிட்டுக் காட்டியது.
உள்ளுர பயணம் மேற்கொள். எல்லாத் துன்பத்திற்கும் மனம் தான் காரணம். ஆம் இந்தத் தலைவலிக்கும்.
ஐயா தயவு செய்து ஆளை விட்டுவிடு நான் தலைவலிக்கான காரணத்தை சிந்திக்கிறேன்என கெஞ்சிக் கூத்தாடி தத்துவம் பேசிக்கொண்டிருந்த மனதை ஒரு சமன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டு சிந்திக்கத் துவங்கினேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த சில நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. ஒருவேளை அவற்றால் தான் இருக்குமோ? என சிந்திக்க, மனம் பதிவுகளை துலக்கத் துவங்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்.
வாங்க வாங்க. உங்கள எங்கலாம் தேடுறது. நாங்க ஒரு நிகழ்ச்சி நடத்தப்போறோம். தேடல்-ன்ற பேரில. ஏற்கனவே சொல்லிருக்கேனே. அதுக்கு நாங்க எடுத்திருக்க வீடீயோ க்ளிப்ஸுக்கு கொஞ்சம் டயலாக், ஸ்க்ரிப்ட் எல்லாம் எழுதித் தறனும். அதான் கூப்பிட்டேன்.’
அதுக்கென்ன. க்ளிப்ஸ போட்டு காட்டுங்க. எழுதிடுவோம். நான் என்னமோ பெரிசா பயந்துக்கிட்டேன்
பயங்கரமான எஃபக்டுகளுடன் விருதுகள் வல்லிய நிற பிண்ணனியில் தோன்றும்படியான வீடியோ க்ளிப் ஒன்று ஓடியது.
யாருக்குங்க. விருது குடுக்கப்போறிங்க? தேடல்ன்றது ஏதோ தொழில் முனையும் இளைஞர்களுக்கான நிகழ்ச்சினு தான சொன்னிங்க?’
ஆமாம். இந்த ப்ரோகிராம்ல ஏற்கனவே பிஸினஸ்ல இறங்கி ஜெயிச்சவங்களுக்கு அவார்ட் கொடுக்கப்போறோம். இப்புடி செய்றது யூத்ஸுக்கு ஒரு என்கரேஜ்மெண்டா இருக்கும்னு நெனைக்கிறோம்.’
ரைட் ரைட். அப்ப இந்த வீடியோ நீங்க விருது கொடுக்கறதுக்கு முன்னாடி போடுவிங்க. புதிய தலைமுறை தமிழன் விருதுகள் மாதிரி
கரெக்ட். நீங்க இப்ப இதுக்கு வொர்டிங்ஸ் கொடுக்கனும்
வொர்டிங்ஸ் எப்புடி இருக்கனும்? கவிதை மாதியா இல்ல சும்மா கேட்சியாவா?’
கவிதை
.கே
மணி சரியாக பத்தைத் தொட்டிருந்தது. நான் யோசிக்க அவர் எடிட்டிங் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார். லேஸ், சாக்லேட் என அரைமணி நேர அரவைக்குப்பின் ஒரு கவிதை அகப்பட்டது.
பார் பிறழும் அந்நிமிடம்
சார்பொடியும் அத்தருணம்
தோன்றும் இஃது
நின் உறங்கும் புதை திறன் சுட்டி
நாம் அறியா நம்மை இனம் காட்டும். தேடல்
எப்டிங்க இருக்கு?’
என்னங்க இது ஒன்னுமே புரியல. கொஞ்சம் எக்ஸ்ப்ளைன் ப்ளீஸ்
அதாவது இந்த கவிதை தேடல்னா என்ன எப்புடி இருக்கும்னு உணர்த்துர வகையில இருக்கு.’
சரி
எல்லாருக்கும் வாழ்க்கையில ஒரு நிமிஷம் வரும். அந்த நிமிஷம் நாம நமக்குனு கற்பன செஞ்சு வச்சிருக்க உலகத்த தலகீழா திருப்பிடும். அதுக்குத்தான் பார் பிறழும் அந்நிமிடம்.
அதே மாதி அந்த நிமிஷம் நாம சார்ந்திருக்க எல்லாதையும் எல்லாரையும் பொய்னு காட்டி உண்மைய ஒடைக்கும். அதுக்கு தான் சார்பு உடையும் அத்தருணம்.
உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டிருக்க புதஞ்சு கிடக்கிற சக்திய எழுப்பிவிட்டு, உங்களுக்கே நீங்க யார்னு அடையாளம் காட்டும். இதத்தான் இங்க சொல்ல வந்தேன்.’
ம். இது நல்லாருக்கே. அப்ப்டியே யூஸ் பண்ணிக்குவோம்
ரைட் பாத்துக்கங்க. நான் கெளம்புறேன்?’
என்ன கெளம்புறிங்களா?’
அப்புறம்?’
இன்னும் பத்து பதினஞ்சு க்ளிப்ஸ் பாக்கி இருக்கு
இப்ப என்ன. காலைல செய்வோம். மணி வேற பத்துக்கு மேல ஆச்சு
ஏங்க ஏங்க ப்ளீஸ்ங்க. நாளைக்கு காலைல ரெக்கார்டிங். இன்னைக்கு நைட்குள்ள எல்லாத்தையும் முடிச்சாகனும்.’
அதுக்கு?’
இங்கயே தங்கிடுங்களேன். முடிச்சுட்டு காலைல போலாம்
இப்ப என்ன முடியாதுனா நீங்க விடவா போறிங்க. இருக்கேன்.’
தலாஷ், மை காட் என ஹிந்தி படங்களின் தயவால் தூக்கம் விரட்டப்பட்டு விடிய விடிய வேலை முடிந்தது.

மறுநாள் காலை கல்லூரியில்,
நன்றாக உறங்கிக் கொண்டிருக்கையில்டேய் எந்திரிஎன அருகில் அமர்ந்திருக்கும் நண்பன் தட்டியதைத் தொடர்ந்து மாணவர்களின் ஒருமித்த குரலில்குட் மார்னிங்ஒலித்தது.
கண்ணைத் திறந்து பார்க்கையில்குட் மார்னிங் ஆல். சிட் டவுன்என கூறிக்கொண்டே பேராசிரியர் உள்ளே வருவது புலப்பட்டது. நாம் தூங்கிக் கொண்டிருப்பது வகுப்பறையில் என நிதானித்துக்கொள்ள ஒரு நிமிடம் பிடித்தது.
வகுப்பு துவங்கியது. உள்ளே நுழைந்த ஆசிரியர் எதுவும் பேசவில்லை. கரும்பலகைப் பக்கம் திரும்பி ஏதோ எழுத ஆரம்பித்தவர், பத்து நிமிடம் கழித்துதான் திரும்பினார். அவர் விலக பலகை பல்வேறு படங்களுடன் கூடிய ஆல்ஃபாக்களாலும், பீட்டாக்களாலும், காமாக்களாலும் நிரம்பி வழிந்தது.
இன்னைக்கு நாம பாக்கப்போறது ஜெனரேட்டர். .கேஎன வழக்கமான நடையில் ஆசிரியர் ஆரம்பித்தார்.
டேய் நான் போன தடவ க்ளாஸ்க்கு வந்தப்ப இதே சப்ஜெக்ட் தானே ஓடிச்சு?’ என பக்கத்தில் கேட்க
ஆமா. நேத்து க்ளாஸ்க்கு தான் நீ வந்தைலஎன பதில் வந்து விழுந்தது.
. ஆமாமா நேத்து வந்ததுக்குள்ள இன்னைக்கு வந்துட்டமேஎனப் பெருமிதத்துடன் வகுப்பைக் கவனிக்கலானேன்.
.சி ஜெனரேட்டர் முடிந்து ஃப்ளம்மிங் லாக்கள் முடிய ஆங்கில வகுப்பு தொடங்கியது. அப்துல்கலாமோ ஆர்.கே நாரயணனோ தெரியவில்லை. ராவெல்லாம் விழித்த கண்களின் ஷட்டரை மூடச் சொல்லி மூளை உத்தரவிட மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஓர் அரை மயக்க நிலையில் மீதி வகுப்புகள் சென்றன. உணவு இடைவேளையின் போது கூட உணவில் நாட்டமில்லை என்றால் அதன் வீரியத்தைப் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஒரு வழியாக கல்லூரி முடிந்து மற்ற வேலைகளை எல்லாம் முடித்து வீடு திரும்ப மாலை ஐந்தானது. தூக்கமின்மையும் களைப்பும் பாடாய்ப்படுத்த உடனே கண்ணயற்வதற்கான வேலையில் இறங்கினேன். இணையதளத்தை இரண்டு நாட்களாக தொடாதது நினைவுக்கு வர கணினி திறக்கப்பட்டது. அனைவரையும் போல் ஃபேஸ்புக்கை கடந்து மின்னஞ்சல் ஏதும் வந்துள்ளதா? என ஒரு டேபை திறக்க, புதிதாக ஒரு அஞ்சல் என் பார்வைக்காக காத்துக்கிடந்தது.
இது தான் இன்றைய தலைமுறை இணையத்திற்கு கட்டுண்டு கிடப்பதன் முதன்மைக் காரணம். தினமும் பலரிடமும் அடிபட்டு உதைபட்டு வருபவனிடம்உனக்கும் மனமுண்டு, அதனைப் பகிரவும் இடமுண்டுஎன ஆறுதல் கூறி இடமளித்துஉங்கள் கட்டளைக்காக காத்திருக்கிறேன்என மீண்டும் அலாவுதீன் பூதமாய் நம்முன் பவ்யமாய் நிற்கும் அதே தன்மை தான். அதே அடிமைத் தன்மை தான். தனக்கும் ஒரு அடிமை இருப்பதால் ஒவ்வொருவரும் தன்னை அரசானகப் பாவித்து வாழும் அந்த தன்மையைத் தருவதால் தான். உண்மையில் இணையம் நமக்கு அடிமையா இல்லை நாம் இணையத்திற்கு அடிமையா என்று ஒருவன் சிந்திக்கத் துவங்கினால், அவன் அவ்விடத்தில் ஒரு மிகப்பெரிய வியாபார யுக்தியை கண்டடைந்து விட்டான் என்று பொருள். சரி கதைக்கு வருவோம்.
Poems எனும் தலைப்பில் கிட்டத்தட்ட நாற்பது இணைப்புகளுடன் கூடிய ஒரு மின்னஞ்சல். நண்பனிடம் இருந்து.
காலையில் இருந்து களைப்படைந்தவனுக்கு கவிதை என்றவுடன் புத்துணர்வு பிறந்தது. மிக ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்து கோப்பைத் திறந்தேன். முதல் கவிதையே ஆளை அடித்து துவைத்துப் போட்டது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் கோட்பாட்டின்படி வாழ்வதால் இதை உங்களிடம் பகிராமல் என்னால் இருக்க முடியவில்லை.
AVOID CIGARETTE
Cigarette destroys the nervous system of the body,
Nicotine chemical is mixed in it,
It spreads throughout the lungs
Activities of the body will be stopped
First destroys the stomach and lungs,
Destroys energy and gives laziness.


Increases the calf and throat infection
It gives palpitation,
Blood pressure cannot be managed properly
If you have smoking habit,
Stop immediately and save your life
Everything is possible for everybody.
GLOSSARY:-
Nicotine – the poisonous chemical substance in tobacco Palpitation – rapid or irregular beating of your heart caused by fear or excitement.
By,
Thambi, Bsc OOO, XYZ College, XYZ, www.facebook/thambi887, thambi887@gmail.com, 8542146321
என்ன. எப்படியுள்ளது. எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை. உடனே நண்பனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
டேய் யாருடா அந்த தம்பி? என்னடா அனுப்பி வச்சிருக்க?’
அது நம்ம ஜூனியர்டா. கவிதை எழுதிருக்கேன்னு சொல்லி எனக்கு அனுப்பி வச்சான். நான் அப்டியே உனக்கு அனுப்பி வச்சேன்.’
அப்ப நீ வாசிக்கல
ம்ஹூம்.’
இணைப்பைத் துண்டித்தேன்.
என்னால் இனி தூங்க இயலாது. அந்த தம்பியிடம் பேசியே ஆகவேண்டும். ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் இருந்த தம்பியின் பயோடேட்டாவை சற்று பார்த்தபின் அவனது ஃபேஸ்புக் ஐடிக்குச் சென்றேன்.
தம்பி நீங்கள் அனுப்பியுள்ளதை தயவு செய்து படித்துப் பாருங்கள்என ஒரு மெசேஜ் அனுப்பினேன். ஒரே நொடியில் தம்பியிடமிருந்து ஒரு ப்ரண்ட் ரெக்வஸ்ட்டும் அதனைத் தொடர்ந்து மறுமொழியும் வந்தது.’
ஏணே நல்லா இல்லையா?’
அப்டி இல்ல தம்பி. இத எந்த வகையில கவிதைனு சொல்றது?’
இல்லணே எங்க இங்கிஷ் சார் தான் கவிதைனா சிம்பிளாவும் இருக்கலாம்னு சொன்னாரு
கவிதை சிம்பிளா இருக்கலாம் தான். ஆனா இதுல கவிதைக்குரிய எதுவும் இல்ல
இல்லணே அவரு தான் சொன்னாரு. நான் இது மாதி 400 கவிதை எழுதி இருக்கேன். இது எல்லாத்தையும் தொகுத்து புக்கா கொண்டுவரனும். அதான் அண்ணே உங்ககிட்ட அனுப்புறேனு சொன்னாரு. முடியாதுனா ஒன்னுமில்லனே. நான் வேற யாரையாவது பாத்துக்கிறேன்.’
நான் முடியாதுன்னு சொல்லல, இத நீயே படிச்சு பாரு புரியும்னு சொல்றேன். புரியுதா
எதிரிலிருந்து பதிலேதுமில்லை. சற்று நேரத்தில் தம்பி ஆஃப்லைன் சென்றான். சற்று நேரத்தில் அவனது சுவற்றுக்கு என்னால் செல்லமுடியவில்லை. தம்பி என்னை ப்ளாக் செய்துவிட்டது புரிந்தது.
சோர்வு தலைவலியாக பரிணமித்த இடம் இதுதான். அதோடு தூங்கிவிட்டேன். எழுந்தும் தலைவலி மாறவில்லை. அதிகரித்துக்கொண்டே சென்றது. இதே நிலைதான் இன்றும். தாங்கமுடியாத வலி. காலையில் இருந்தே ஜீ அழைத்துக்கொண்டே இருந்ததால் அவர் கடைக்குக் கிளம்பினேன்.
என்னங்க ரொம்ப டல்லா இருக்கீங்கஜீயின் குரல் அக்கரை இக்கரை என எல்லாக் கரையோடும் வரவேற்றது.
ஒன்னுமில்லைங்க ஜீ. ரெண்டு நாள ஒரே தலவலி.’
என்ன ஏதுனு டாக்டர போய் பாக்க வேண்டியது தானே?’
அடப் போங்க ஜீ. நாம என்னைக்கு போனோம். காலைல இருந்து தலவலி வந்ததுக்கான காரணத்த தான் யோசிசிட்டு இருந்தேன்.’ என நடந்தவற்றைக் கூறினேன்.
பலமாக சிரித்தவர்ஆமா உங்க கண்ணாடி எங்க?’ என்றார்.
அது ஒடஞ்சு போச்சு. பாக்குறதுல பெருசா ஏதும் பிரச்சனை இல்லாததால அப்புடியே விட்டுட்டேன்.’
எத்தின நாளா கண்ணாடி போடல
மூனு நாளா
அதான் தலவலிக்குது
சும்மா கிடந்த மனம் மீண்டும் எழுந்து கொண்டு தத்துவ ஜெபத்தை துவங்கியது. ஜீயும் தொடர்ந்தார்.
நீங்க தூங்காம இருக்கிறது ஒன்னும் புதுசில்லயே. கண்ணாடி போடலைனா அப்டிதான் தல வலிக்கும்
பல மணிநேரம் யோசித்து வைத்த தலைவலிக்கான காரணத்தை ஜீயுடனான ஒரு நிமிட உரையாடல் உடைத்தெறிந்துவிட்டது. இறுதியில்,
ஆமாங்க ஜீ. வெவெரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கண்ணாடி போடற நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்.’ என ஒப்புக்கொண்டேன்.
அடுத்து, கண்ணாடி போட வேண்டும் என திட்டத்தை மாற்றினேன். கண்ணாடி போட வேண்டும் என்ற முடிவு மட்டுமே, அதற்காக டாக்டரிடம் எல்லாம் போக முடியாது. கண்ணாடியின் பவர் தெரிந்தால் போதும் நாமே சென்று ஏதாவது ஆப்டிகல்ஸில் கண்ணாடி வாங்கிவிட வேண்டியது தான். உடைந்த கண்ணாடியை வைத்து ஏதாவது பரிசோதனை செய்து நமது பவரை நாமே தெரிந்து கொள்வோம் எனும் தீர்மானத்தோடு வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.
சராமாரியாக அலமாரியைக் கிளைத்தும் பவருக்கான துருப்புச்சீட்டு ஏதும் சிக்கவில்லை. பரிசோதனைக்காக வன்கொடுமை செய்யப்பட்ட மெழுகுவர்த்திகளும் பல்புகளும் ஆடிகளும் ஏன் என் கண்களும் கூட கையை விரித்தன. பிறகு,
எதுக்கிருக்கிறது நம் அடிமை. இணையத்தில்Online Eye Power Test’ என டைப் செய்து துலாவினேன். ஓரிரண்டு உருப்படியான தளங்கள் வசமாக மாட்டின.
முதலில் என் கணினியின் திரை அளவைக் கேட்டன. பின்னர் திரையிலிருந்து ஒன்றரை மீட்டர் விலகி உட்காருமாறு கூறின. அப்படியே செய்தேன். பின்னர் கண் மருத்துவரைப் போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு சில எழுத்துக்களை வாசிக்கச் சொல்லின. இறுதியில் முடிவு வந்தது L: -1.5; R: -0.5. மறுநிமிடம் ஜீயை தொடர்பு கொண்டேன். கண்ணாடி வாங்கப் போவோம் வாருங்கள் என்றேன். அவரும் வீட்டுக்கு வந்தார்.
எந்த டாக்டர்கிட்ட போனிங்க
எல்லாம் நம்ம டாக்டர் தாங்க.ஜீ
யாருங்க? நம்மூர்ல தான் கண் டாக்டர் யாருமில்லையே?’
நாம தா ஜீ டாக்டர்
விளையாடாதீங்க. இதெல்லாம் டாக்டர்கிட்ட தான் பாக்கணும். பவர் மாறுனா பிரச்சனையாயிடும். எனக்குத் தெரிஞ்சு ஒருத்தருக்கு கண்ணு தெரியாம போய்டிச்சு. அதாவது பரவாயில்ல. இன்னொருத்தருக்கு பவர் மாத்தி கண்ணாடி போட்டதால மாறுகண் வந்திடிச்சு.’
நான் இதற்கு மேல் ஒன்றும் பேச விரும்பவில்லை.
எந்த டாக்டர் கிட்ட போலாம்?’
டாக்டர் அஞ்சு மணிக்கு தான் வருவாரு
சார் வர ஆறு மணியாகும்
டாக்டர் ட்யூட்டி முடிச்சு வர ஆறரையாகும்
ஆர்வக்கோளாறில் மூன்றரைக்கே போய் நின்றது தவறாகி விட்டது. சரி நேரத்தைக் கடத்த இந்த ஊரில் எத்தனை கண் மருத்துவமனை இருக்கும் என சுற்றிப்பார்த்து விடுவோம் என தீர்மானமானது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நேரம் சொன்னார்கள். இறுதியாக ஆரம்பித்த ஐந்து மணி ஆஸ்பத்திரிக்கே வந்து சேர்ந்தோம்.
எந்த செய்யு?’ டாக்டர் மலையாளி.
படிக்கிறேன்
ஞான் அத கேக்கில்லா. சரீரத்துக்கு எந்துனு கேட்டு
ரெண்டு நாளா கண்ணாடி போடாததால தல வலிக்குது
அவர் எதுவும் பேசவில்லை. எல்லோரும் செய்வதைப் போல் ஒரு கருவியில் எட்டிப்பார்க்கச் செய்தார். பலூன்கள் தெரிந்தது. பின்னர் சிறுத்துவரும் எழுத்துக்களை படிக்கச் சொன்னார். இறுதியில் ஒரு பேப்பரில் எனக்கு தெரிந்திடாதபடி L -1.5; R -0.5 என எழுதினார். ஆன்லைன் பரிசோதனையின் துல்லியத்தை நினைத்து நான் வியந்தேன். பிறகு, நர்சிடம் சைகை காடினார். எனக்கான சோதனை முடிந்தது என உணர்ந்தேன்.
டாக்டர் போல் இரண்டு வசனத்தை பேசாமல் டீவி பார்க்கக்கூடாது, வெளிச்சம் குறைவா படிக்கக் கூடாது, டீ காபி குடிக்கக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களை பேசினார் அந்த நர்ஸ். ஆனால் டாக்டருக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமை, என்னை எதுவும் பேச அனுமதிக்காமல் அவர்களே ஒருமுடிவுக்கு வந்திருந்தனர்.
டாக்டர் ஃபீஸ் முன்னூறு. மருந்து மாத்தர ஒரு நூறு. கண்ணாடி ஹால்ஃப் ஃப்ரேமா குடுத்துருவோம். பில்லக்காட்டி கையோட வாங்கிட்டுபோயிடுங்க. அது ஒரு எழுநூறு, ஆக மொத்தம் ஆயிரத்திநூறு’
மாத்தர எல்லாம் எனக்கு வேணாம். கண்ணாடி வெளிய வாங்கிக்கிறேன். இந்தாங்க’ என்று முந்நூறு ரூபாயை நீட்டினேன்.
என்ன நீங்க. அதெல்லம் முடியாது. இங்க தான் எல்லாம் வாங்கியாகனும். இல்லனா உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டி வரும்’
இந்திய சடட்த்தின் அழகு எங்கே இருக்கிறது தெரியுமா. இங்குதான். கம்ப்ளைண்ட் பண்ணப்பட வேண்டியவனே கன்ப்ளைண்ட் கொடுத்து நம்மை மிரட்டும் அந்த இடத்தில் தான்.
வேறு வழியே இல்லை. ஏண்டா இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனு மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினேன்’
சில்லரயா நூறு ரூபா இல்லையா’
இல்ல’
சரி மேல போய் டெஸ்ட் எடுத்துட்டு அவுங்க்கிட்டயே சேஞ்ச் கேட்டு வாங்கிட்டுவாங்க’
டெஸ்ட்டா?’
ஆமா ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், சளி டெஸ்ட் எல்லாம்.’
எதுக்கு?’
என்ன நீங்க கேள்வியா கேக்குறிங்க. எல்லாம் உங்க நல்லதுக்கு தான். போங்க மொதல்ல’
மேல சென்றவுடன் என் இரத்தத்துக்காகவே காத்துக்கிடந்த காட்டேரி போல் ஒரு நர்ஸ் பெரிய ஊசியை வைத்து உறுஞ்சி ஒரு டப்பாவைக் கையில் கொடுத்து அதில் சிறுநீர் நிரப்பி வருமாறு கழிப்பறையை நோக்கி கைகாட்டியது.
மொத்தம் முன்னூறு’.
ஆயிரத்தைக் கையில் கொடுத்தேன். மீதிச் சில்லரை கொடுத்தது.
இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்து ரிசல்ட வாங்கி டாக்டர்கிட்ட காமிச்சுட்டு போங்க’
எதுக்கு. இன்னைக்கு புடுங்கினது பத்தலையா’ என முனுமுனுத்தேன்.
படியில் மேலிருந்து கீழே இறங்கும் போது ஜீயிடம் ‘ஜீ கீழ போனதும் குனிஞ்சு பேசாம நடங்க. யாரையும் பாக்காதிங்க’ என சொல்லிக்கொண்டே வந்தேன். கீழே வந்தவுடன் என் கைபேசியை எடுத்து சைலண்ட்டில் போட்டுவிட்டு காதில் வைத்தேன்.
ம். சொல்லுங்க. கேக்குது. ஹலோ. உங்களுக்கு கேக்கலையா. இதோ இருங்க வெளிய வரேன்.’ என பேசிக்கொண்டே ஜீயுடன் வெளியேறினேன். பின்னால் திரும்பி பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக அந்த மருத்துவமனை இருந்த திக்கைவிட்டு வெளியேறினோம்.
என்ன்ங்க நீங்கபாட்டுக்க வெளிய வந்துட்டீங்க’
அப்பறம் இருந்து ஆயிரத்தி நூற குடுத்துட்டு வர சொல்றிங்களா? யூரினுக்குப் பதிலா தண்ணிய செக் பண்ணப்போறவனுங்களுக்கு முன்னூறே அதிகம். இதில என் ரத்தத்த வேற உருஞ்சிட்டானுக’
ஓ அதான் டாய்லட்குள்ள போனவொடன வெளியேறிட்டிங்களா?. டெஸ்ட் பண்ணாம மொதல்லயே ஓடி வந்திருக்கலாம்ல’
அது தர்மம் இல்ல ஜீ. எதோ நமக்கு ஐ பவர் சொன்னதுக்கு ஒரு முன்னூறு’